இணையதளம் மூலம் வரி செலுத்தும் பணி
திருப்பாற்கடல் ஊராட்சியில் இணையதளம் மூலம் வரி செலுத்தும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
காவேரிப்பாக்கம்
திருப்பாற்கடல் ஊராட்சியில் இணையதளம் மூலம் வரி செலுத்தும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
இணையதளம் மூலம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் திருப்பாற்கடல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இணையதளம் வழியாக கிராம குடியிருப்புவாசிகளின் வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகளை செலுத்திடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரடியாக சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''பொதுமக்களிடமிருந்து நேரடியாக வரி வசூல் செய்யப்படுவதற்கு மாற்றாக வங்கிகள் மூலமாகவும், நெட் பேங்கிங் மூலமாகவும், 'ஜி பே' மூலமும் வரிகளை அரசு கணக்கில் சேர்க்கலாம். இந்த ஊராட்சியை மாதிரி ஊராட்சியாக தேர்ந்தெடுத்திட அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
பின்னர் திருப்பாற்கடல் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். கழிவு நீரை சுத்திகரித்து, உறிஞ்சி குழி வழியாக பூமிக்குள் செல்வதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
சத்தான உணவு
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை பரிசோதித்து, குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்கிட கேட்டுக்கொண்டார்.
பின்னர் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடு, ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ள ஆண்கள் சுகாதார வளாகத்தை பார்வையிட்டார் அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம் கூடுதலாக அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஊராட்சியில் தகுதியுள்ள முதியோர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் முதியோர் உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தனஞ்செழியன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் உடனிருந்தனர்.