மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு - 22-ந் தேதி தொடங்குகிறது


மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு - 22-ந் தேதி தொடங்குகிறது
x

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 22-ந் தேதி தொடங்குகிறது.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் காண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 22-ந் தேதி தொடங்குகிறது.

சித்திரை திருவிழா

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வருகிற 22-ந் தேதி, மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், திக்குவிஜயம் மே 1-ந்தேதியும், திருக்கல்யாணம் 2-ந்தேதியும், தேரோட்டம் 3-ந்தேதியும், கள்ளழகருக்கு எதிர்சேவை 4-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து, மே 5-ந்தேதி அதிகாலை கள்ளழகா் வைகையாற்றில் எழுந்தருள்கிறார்.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி, கோவிலின் வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், அன்று காலை 8.30 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது.

திருக்கல்யாணத்தை நேரில் காணவிரும்பும் பக்தர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவிலின் துணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ரூ.500-ரூ.200

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 மற்றும் ரூ.500 கட்டண சீட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுபோல், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் கொள்ளளவுக்கு ஏற்ப அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.

திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகியவற்றில் 22-ந் தேதி முதல் 25-ந்தேதி இரவு 9 மணி வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரூ.500-க்கான கட்டண சீட்டு பதிவில் ஒருவர், இரண்டு சீட்டுகளை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுபவர். அதுபோல், ரூ.200 பதிவில் ஒருவர், 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஒரே நபர் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டண சீட்டுகள் என இரண்டையும் பதிவு செய்ய இயலாது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டண சீட்டு வாங்க வேண்டும். பிறந்த தேதிைய சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு செல்போன் எண் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

தங்கும் விடுதியில் வசதி

பக்தர்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கு இணங்க, கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ேமற்குறிப்பிட்ட நாட்களில் நேரடியாக கோவில் பணியாளர்களை கொண்டு முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டண சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் தங்களது ஆதார் கார்டு, செல்போன் எண், இ-மெயில் முகவரி இருப்பின் அதுகுறித்த விவரத்தை தெரிவித்து முன்பதிவு செய்யலாம்..

கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அதுபற்றிய தகவல் பக்தர்களின் இ-மெயில் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் 26-ந் தேதிக்குள் அனுப்பப்படும்.

இந்த தகவல் கிடைக்க பெற்றவர்கள் 27-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு திருக்கல்யாண நுழைவு சீட்டு விற்பனை மையத்தில் சம்பந்தப்பட்ட தகவலை காட்டி, கட்டண சீட்டிற்கான தொகையினை ரொக்கமாக செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளலாம். இந்த தேதி மற்றும் நேரத்திற்கு பின்பு வருபவர்களுக்கு கட்டண சீட்டு வழங்க இயலாது.

வெளியூரில் வசிப்பவர்கள் மட்டும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் 1-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டண சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

7 மணி வரை அனுமதி

திருக்கல்யாணம் 2-ந்தேதி தேதி காலை 8:30 மணி முதல் 8:59 மணிக்குள் நடைபெறும் என்பதால், நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் அன்றைய தினம் காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரூ.500 கட்டணச் சீட்டு பெற்றவர்கள், கோவில் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியிலும், ரூ.200 சீட்டு பெற்றவர்கள், வடக்கு-கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே அமைக்கப்பட்ட பாதையில், வடக்கு ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story