ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும் -த.வெள்ளையன் பேட்டி
அச்சரப்பாக்கத்தில் வணிகர் தின விழா மாநாடு: ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும் த.வெள்ளையன் பேட்டி.
அச்சரப்பாக்கம்,
அச்சரப்பாக்கத்தில் வணிகர் தின விழாவையொட்டி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட த.வெள்ளையன், ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார்.
வணிகர் சங்க மாநாடு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் தினத்தையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்பட சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் த.வெள்ளையன் கூறியதாவது:-
ஆன்லைன் வர்த்தகம்
நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி உள்ளது. இதன்மூலம் நமது வணிகத்தை உயிரோடு குழிதோண்டி புதைத்து வருகிறார்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். நம் நாட்டு தயாரிப்புகளை பார்த்து வாங்கி அதை வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும்.
அந்நிய தயாரிப்புகள் அதிகமாக விற்பனைக்கு வந்துவிட்டது. இதனால் நமது வணிகத்துக்கு ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது. நம் நாட்டு தயாரிப்புகள் காப்பாற்றப்பட வேண்டும். அந்நிய தயாரிப்புகளை விரட்டி அடிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும். இதற்கு வணிகர் சங்க பேரவை தொடர்ந்து போராடும்.
சிறை நிரப்பும் போராட்டம்
எந்த காலத்திலும் இல்லாத வகையில் தற்போது அரிசிக்கும் ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி ஒழியும் வரை நாம் போராட வேண்டும்.
எதற்காகவும் சிறைக்கு செல்லவும் தயாராக வேண்டும். இதன் முதல் கட்டமாக மதுரையில் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.