ஊழல்பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது


ஊழல்பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊழல்பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது

கோயம்புத்தூர்

கோவை

ஊழல் பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது. தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று கோவையில் அண்ணாமலை பரபரப்பாக பேசினார்.

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

பா.ஜனதா கட்சியின்கோவை தெற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 பேருக்கு காதுகேட்கும் கருவி, செயற்கை கால்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு காதுகேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு எழுச்சி

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜனதாவுக்கு பெரிய எழுச்சி ஏற்பட்டு உள்ளது. நான் கட்டி உள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. என்னை பொருத்தவரை இந்த வாட்ச் குறித்து எவ்வளவு பேசுகிறார்களோ அவ்வளவு எனக்கு நல்லதுதான். எனது வாட்ச் தொடர்பான பேச்சு அதிகமாக வந்த பின்னர் வாட்ச் குறித்த வாரண்டி மற்றும் நம்பரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வேன்.

70 ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக காத்துக்கொண்டு இருக்கிறோம். அனைத்து அமைச்சர்களும் இது குறித்து பேச வேண்டும். நான் இந்த வாட்ச் ரசீது தொடர்பான அனைத்தையும் வெளியிடும்போது, தி.மு.க.வின் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் பதிவு செய்ய வெப்சைட் மற்றும் செல்போன் செயலியையும் அறிமுகப்படுத்துவோம்.

அமைச்சர்களின் சொத்துபட்டியல்

லஞ்சம், ஊழல் பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. தி.மு.க. குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் குறித்து வேறு யாருக்கும் பேச தைரியமும் இல்லை, தகுதியும் இல்லை. ஒவ்வொரு அமைச்சரின் சொத்துப்பட்டியலையும் வெளியிடுவோம். அவர்கள் தைரியம் இருந்தால் பேசட்டும்.

அண்ணாமலை, தி.மு.க. குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்து பட்டியலை வெளியிடுவாரா அல்லது ஒரு வாட்ச்சின் ரசீதை வெளியிடுவாரா என்று எப்போது டீக்கடையில் பேச்சு தொடங்குதோ அப்போதுதான் அரசியல் ஆரம்பமாகும்.

ஏப்ரல் மாதத்துக்குள் வெளியிடப்படும்

தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபயணம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு எனது வாட்ச் தொடர்பாகவும், தி.மு.க. குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் இவை அனைத்தையும் நாம் கண்டிப்பாக வெளியிடுவோம். நமக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதை நாம் வாக்காக மாற்ற அயராது உழைக்க வேண்டும்.

நம்மை போன்று ஆர்ப்பாட்டம், போராட்டங்களை எந்த கட்சியினரும் செய்யவில்லை. தமிழகத்தில் 25 எம்.பி.க்களை பெற்று அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் பா.ஜனதா இருக்கிறது. வாரிசு அரசியலை முடிவு கட்ட நமக்கு வாய்ப்பு இருக்கிறது. 2024 தேர்தலில் தி.மு.க.வுக்கு முடிவு கட்ட நம்மால் மட்டுமே முடியும்.

மக்கள் மத்தியில் மாற்றம்

25 எம்.பி.க் களுக்கு மேல் பா.ஜனதாவுக்கு நீங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டால், அதன் பிறகு தி.மு.க.வை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் பா.ஜனதாவுக்கு திரும்பி விடுவார்கள். தி.மு.க.வுக்கு எப்படி செக் வைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். எனவே தற்போது மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள்பா.ஜனதாவுக்கு வாக்காக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story