பிரதமராக மீண்டும் மோடி வந்தால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்-அண்ணாமலை பேச்சு


பிரதமராக மீண்டும் மோடி வந்தால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்-அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 13 Aug 2023 12:30 AM IST (Updated: 13 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது. பிரதமராக மீண்டும் மோடி வந்தால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று விளாத்திகுளம் பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

"நாங்குநேரி சம்பவம் கண்டிக்கத்தக்கது. பிரதமராக மீண்டும் மோடி வந்தால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்" என்று விளாத்திகுளம் பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.

2-வது நாள் பாதயாத்திரை

தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்...என் மக்கள்..' என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தனது பாதயாத்திரையை தொடங்கினார். நேற்று 2-வது நாளாக விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் இருந்து அண்ணாமலை தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

தொடர்ந்து ஆற்றுப்பாலம், எட்டயபுரம் சாலை, மதுரை ரோடு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பகுதி, கீழரத வீதி, சன்னதி வீதி, மார்க்கெட் சாலை வழியாக பஸ் நிலையத்தில் நிறைவு செய்தார். மாலையில் ஓட்டப்பிடாரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி, புதியம்புத்தூரில் நிறைவு செய்தார்.

தி.மு.க. நிறைவேற்றவில்லை

விளாத்திகுளம் பாதயாத்திரையில் அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-

விளாத்திகுளத்தில் எந்த குளத்திலும் தண்ணீரை பார்க்க முடியவில்லை. இங்குள்ள வைப்பாற்றில் எப்போதும் தண்ணீர் நிற்காமல் வந்த காலம் உண்டு. தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அணையில் ஒரு பகுதி நீர் வைப்பாற்றுக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த தண்ணீரால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெற்றனர். இதை வைத்து விளாத்திகுளத்தில் பருத்தி, மிளகாய், விவசாயம் செய்தனர். ஆனால் தற்போது செண்பகவல்லி அணை சேதமடைந்து உள்ளது. இதனை சீரமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க. அதை இன்னும் நிறைவேற்றவில்லை.

நாங்குநேரி சம்பவம்

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 1,600 ஏக்கர் மற்றும் சொத்துக்கள் உள்ளன. இதை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 30 நாட்களில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்துவோம்.

குலசேகரன்பட்டினத்தில் மத்திய அரசு சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் பொறியியல் படித்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திராவிட மாடல் ஆட்சியில் நாங்குநேரியில் பள்ளியில் சாதி பெயரை சொல்லி மோதியது மட்டுமின்றி, வீட்டிற்கு சென்று மாணவனையும், அவரது தங்கையையும் வெட்டி உள்ளனர். அதில் ஒரு மாணவரின் பெரியப்பா தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆவார். சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதியார் வாழ்ந்த மண்ணில் நடந்த இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்தை பாராட்டாமல் இயக்குனரை முதல்-அமைச்சர் பாராட்டியுள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் நடித்து, தயாரித்த படத்தை மட்டும் முதல்-அமைச்சர் பார்த்து விட்டு பாராட்டுவார்.

3-வது முறையாக பிரதமராக மோடி வரக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வந்தால் மட்டும் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதியார் சிலைக்கு மரியாதை

முன்னதாக எட்டயபுரம் மெயின் ரோட்டில் உள்ள பாரதியாரின் மணிமண்டபத்திற்கு அண்ணாமலை சென்றார். அங்கு பாரதி வேடமணிந்த குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் பாரதியார் வீட்டிற்கு சென்று அங்குள்ள அவரது மார்பளவு சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாதயாத்திரையில் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி, மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், எட்டயபுரம் மண்டல தலைவர் சரவணகுமார், இலக்கிய அணி பொறுப்பாளர் நாகராஜன், நிர்வாகிகள் ஹரிஹரசுதன், சேசன், முதலாளிச்சாமி, வினோத் கண்ணன், முன்னள் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story