ஜனநாயக அடையாளத்தோடு செயல்பட்டால்தான்: இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க முடியும் -திருமாவளவன்


ஜனநாயக அடையாளத்தோடு செயல்பட்டால்தான்: இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க முடியும் -திருமாவளவன்
x

நாம் மொழி, இனத்தின் அடையாளம் இல்லாமல், ஜனநாயக அடையாளத்தோடு செயல்பட்டால்தான் இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க முடியும் என்று திருமாவளவன் பேசினார்.

சென்னை,

சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இந்தி, சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்குக்கு கவிஞர் சி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். டி.எஸ்.நடராஜன், ஜீவா மணிக்குமார், ஜி.மனோகரன், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் த.அறம் நோக்க உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எம்.பொன்னவைக்கோ, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் பேசினர். டாக்டர் ஏ.ஆர்.சாந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கருத்தியல் பெரும்பான்மை

கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மொழி என்ற அடிப்படையில் நாங்கள் வெறுக்கவில்லை. அவர்கள் பிற மொழி பேசுபவர்கள் மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். ஒருவர் இந்தி, சமஸ்கிருதத்தை விரும்பிப் படிப்பது ஜனநாயக முறை. அதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் இந்தியை திணிக்க முயல்வதைத்தான் எதிர்க்கிறோம். நாம் இங்கு ஆளப்படுபவர்களாக இருப்பதால் ஆளுபவர்கள் நம் மீது திணிக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் இந்தியாவை ஆளும் தேசிய இனமாக இல்லை. அப்படியானால், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் எதிர்த்து வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?.

அதற்கு நாம் ஜனநாயகத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை வளர்க்க வேண்டும். ஆதிக்க வெறி கொண்டவர்களை ஜனநாயகத்திற்கு மாற்றுவதே இதற்கான தீர்வு. பார்ப்பனர்களின் எண்ணிக்கை சிறுபான்மையாக இருந்தாலும், அவர்களின் கலாசாரத்தை பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் கருத்தியல் பெரும்பான்மை உடையவர்களாக மாறி இருக்கிறார்கள்.

ஜனநாயக அடையாளம்

7 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள், 5 கோடிக்கும் மேற்பட்ட தெலுங்கர்கள், 3½ கோடிக்கும் மேல் கன்னடர்கள் உள்ளனர். ஆனால், வெறும் 14 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான ஒரே காரணம் பார்ப்பனியர் நலன் என்ற ஒற்றைக் காரணம்தான்.

எனவே, நாம் மொழி உணர்வு மட்டும் அல்லாமல், ஜனநாயகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கு தெலுங்கு, மலையாளம், கன்னட ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும். நமது அடையாளம் மொழியால், இனத்தினால் இல்லாமல் ஜனநாயக அடையாளத்தோடு செயல்பட்டால்தான் இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story