கடைகோடி மக்களுக்கு சென்று சேர உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே முடியும்


கடைகோடி மக்களுக்கு சென்று சேர உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே முடியும்
x

முதல்-அமைச்சரின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேர உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே முடியும் என்று திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

திருவண்ணாமலை

முதல்-அமைச்சரின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேர உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே முடியும் என்று திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் இன்று மாலை மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திராவிட மாடல் ஆட்சியின் பிரதிநிதிகள்

உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாகிய நீங்கள் தான் தலைவர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் பிரதிநிதிகள். தமிழக முதல்-அமைச்சர் தினமும் பல்வேறு திட்டங்களை வகுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

50 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோர். தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

சொன்னது போல் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் வசதி செய்து கொடுக்கப்படும் என்றார்.

அதையும் செய்து காண்பித்து உள்ளார். இது பெண்களுக்கான ஆட்சி, மக்களுக்கான ஆட்சி. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தல்களிலும் தி.மு.க.விற்கு தொடர் வெற்றி கிடைத்து வருகிறது.

4 தேர்தல்களிலும் தி.மு.க. தலைவர் மற்றும் வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். 10 ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்தியவர் தலைவர் ஸ்டாலின் தான்.

நான் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் நம்பிக்கை வைத்து உள்ளனர். அதனால் நம்மை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை தீட்டினாலும் அது கடைகோடி மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்றால் அது உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே முடியும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் வெற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கையில் தான் உள்ளது. முதல்-அமைச்சரின் சாதனைகளையும், திட்டங்களை மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும்.

இதை வைத்து தான் மக்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 2019 மற்றும் 2021 தேர்தலில் எப்படி வெற்றி கூட்டணியை முதல்-அமைச்சர் அமைத்தரோ அதைவிட பலமான வெற்றி கூட்டணியை அவர் அமைப்பார்.

தலைவர் ஸ்டாலின் மேயர் பொறுப்பை ஏற்கும் போது அதற்கான உரையை தயார் செய்து கலைஞரிடம் காண்பித்தார்.

கலைஞர் அதில் சிறிய திருத்தம் செய்து அவரிடம் வழங்கினார். அதில் மேயர் பதவி என்பதை அடித்து விட்டு மேயர் பொறுப்பு என்று எழுதி கொடுத்தார்.

அப்போது அவரிடம் கலைஞர் சொன்னாராம், மக்கள் உன் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். இதை பதவியாக எடுத்து கொள்ள கூடாது. பொறுப்பாக எடுத்து கொண்டு பொறுப்பாக செயல்படு என்றார். அதேபோல் நீங்களும் உங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

மூத்த முன்னோடிகளுக்கு பெற்கிழி

ஆட்சி மாற்றம் நடந்தது. அ.தி.மு.க. 10 வருடம் தமிழகத்தை ஆண்டது. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சராக இருந்தார்.

அதன் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் தலைவர் ஸ்டாலின் தான். இதற்கு நடுவில் இருந்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிடையாது.

அவர்கள் 6½ லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து சென்று விட்டார். இவ்வளவு கடன் சுமையிலும் தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்து வருகிறார்.

கட்சியின் மூத்த முன்னோடிகளை பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் உருவமாக பார்க்கிறேன். நீங்கள் தான் என்னையும், என்னை போன்ற இளைஞர்களை வழி நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் 1000 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும், 100 மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி, 3 பேருக்கு சக்கர ஸ்கூட்டர், 200 பேருக்கு தையல் எந்திரம், 200 பேருக்கு இஸ்திரி பெட்டி, 10 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் போன்றவை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ரூ.51 லட்சம்

முன்னதாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறக்கட்டளைக்கு திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.51 லட்சத்திற்காக காசோலையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக வீரவாள் வழங்கினார்.


Next Story