ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடக்கம்
ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று தொடக்கம்
குன்னூர்
பாறாங்கற்கள் விழுந்த தண்டவாளம் சீரமைக்கும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து மீண்டும் இன்று தொடங்குகிறது.
பாறாங்கற்கள் விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு -ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாள பாதையில் பெரிய சிறிய பாறாங்கற்கள்உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலை ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது.
சீரமைக்கும் பணி
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவையை கடந்த 5 ஆம் தேதி 6-ந் ்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் குன்னூர் ரெயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குன்னூர் மலை ரெயில் இருப்புப் பாதை பொறியாளர் மேற்பார்வையில் ரெயில் தண்டவாள பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் பாதையில் உருண்டு விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் கம்ப்ரசர் மூலம் துளையிட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டன. வெடித்து சிதறிய கற்களை அகற்றிய பின்னர் ரெயில் பாதையை மூடி இருந்த மண்ணை ரெயில்வே தொழிலாளர்கள் அகற்றினர்.
இன்று தொடங்கும்
ரெயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் சுமார் 20 மீட்டர் நீளத்திற்கு ரெயில் தண்டவாளம் மற்றும் ராக் பார்கள் உடைந்து வளைந்து சேதமடைந்தன. ரெயில்வே தொழிலாளர்கள் சேதமடைந்த தண்டவாளம் மற்றும் ராக்பார்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் மற்றும் ராக் பார்களை பொருத்தினார்கள். ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலை 6:30 மணிக்கு முடிவடைந்தது.இதனை தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும்பணி முழுவதும் முடிவடைந்ததால் 2 நாட்களுக்கு பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் -ஊட்டி, மற்றும் ஊட்டி -மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.