ரூ.6¾ கோடியில் 27 நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா


ரூ.6¾ கோடியில் 27 நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா
x

திருப்பூர் மாவட்டத்தில் 27 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 27 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

நகர்ப்புற நலவாழ்வு மையம்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 12-வது வார்டில் காவிலிபாளையம், அப்பல்லோ குமரன் அவென்யூ, 14-வது வார்டில் பெரியார் காலனி, 1-வது வார்டில் சக்திநகர், 8-வது வார்டில் லட்சுமி கார்டன், 3-வது வார்டில் லட்சுமிநகர், 7-வது வார்டில் நஞ்சப்பா நகர், 5-வது வார்டில் எஸ்.குருவாயூரப்பன் நகர், 2-வது வார்டில் செல்வி ஜெயலலிதாநகர், 46-வது வார்டில் செந்தில்நகர், வி.எஸ்.ஏ.நகர், 47-வது வார்டில் விஜயாபுரம், 60-வது வார்டில் அம்மன் நகர், 48-வது வார்டில் பாலபாக்கியாநகர், 44-வது வார்டில் பெரியதோட்டம், 41-வது வார்டில் முருகம்பாளையம், 43-வது வார்டில் மாட்டுக்கொட்டகை வளாகம், 57-வது வார்டில் மூகாம்பிகை நகர், திருக்குமரன் நகர், 52-வது வார்டில் தென்னம்பாளையம், சந்தைப்பேட்டை, 54-வது வார்டில் வீரபாண்டி, 40-வது வார்டில் அம்மன் நகர் லே அவுட், 54-வது வார்டில் கருப்பகவுண்டன்பாளையம், 53-வது வார்டில் குப்பாண்டம்பாளையம் ஆகிய 25 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தாராபுரம் நகராட்சியில் அனுமந்தபுரம், உடுமலை நகராட்சியில் ராமசாமி நகரிலும் ஒரு இடத்திலும் என மொத்தம் 27 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா ரூ.25 லட்சத்தில் மொத்தம் ரூ.6¾ கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.

27 இடங்களில் திறப்பு

தமிழகத்தில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையத்தை காணொலிக்காட்சி மூலமாக சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் 27 நகர்ப்புற நலவாழ்வு மைய தொடக்க நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊட்டச்சத்து பெட்டகம்

நிகழ்ச்சியில் 10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 10 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் மருந்து பெட்டகம் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். பின்னர் புதிதாக திறக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை பார்வையிட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரத்த பரிசோதனை செய்து கொண்டார். இன்று (புதன்கிழமை) முதல் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன், மாநகராட்சி கவுன்சிலர்கள், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story