தொழில்நுட்ப மையம் திறப்பு விழா
தொழில்நுட்ப மையம் திறப்பு விழா
தளி
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசு உதவிகளுடன் பயிற்சியின் போது தொழில் நிறுவனங்களில் உதவித் தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த சூழலில் நடப்பாண்டில் தொழில் 4.0 திட்டத்தில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன் (ஒரு வருட படிப்பு 40 இருக்கை), மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன் (ஒரு வருட படிப்பு 40 இருக்கை), அட்வான்ஸ் சி.என்.சி மெஷின் - டெக்னீசியன் (இரண்டு வருட படிப்பு 24 இருக்கை) படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்காக பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ 34.65 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் தொடக்க விழா நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதைத் தொடர்ந்து மையத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.