18 புதிய கட்டிடங்கள் திறப்பு
தஞ்சை மாவட்டத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட 18 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட 18 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திறப்பு
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா கோவிலடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.22.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள், திருக்காட்டுப்பள்ளியில் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க அலுவலக கட்டிடம், தஞ்சை பாலோப்பநந்தவனம் பொன்னிநகரில் ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்ட பொது வினியோக அங்காடி கட்டிடம், மாரியம்மன்கோவில் கரம்பை காந்தி புதுதெருவில் ரூ.12.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது வினியோக கட்டிடம் ஆகியவற்றை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அதேபோல் அவர், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டையில் ரூ.15.83 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது வினியோக அங்காடி கட்டிடம், குருங்குளம் மேற்கு ஊராட்சி தோழகிரிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.21.62 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள், ஒரத்தநாடு தாலுகா ஈச்சங்கோட்டை ஊராட்சியில் ரூ.19.72 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பொன்னாப்பூர் கிழக்கு ஊராட்சியில் ரூ.10.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
18 புதிய கட்டிடங்கள்
தொடர்ந்து அவர், வலையக்காடு தொண்டராம்பட்டு, பொன்னாப்பூர் கிழக்கு, பொய்யுண்டார்குடிக்காடு, கரம்பயம், நாட்டுச்சாலை, பாவாஜிக்கோட்டை, இளங்காடு, நரசிங்கபுரம் பேய்க்காலிக்காடு, மேலமகானக்காடு, மகிழங்கோட்டை கூடாலிவயல் போன்ற பகுதிகளிலும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். மொத்தம் ரூ.2 கோடியே 98 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட 18 புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டசபை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஒன்றியக்குழு தலைவர்கள் கல்லணை செல்லக்கண்ணு, அரசாபகரன், வைஜெயந்திமாலா, பார்வதி சிவசங்கர், செல்வம் சவுந்தர்ராஜன், பழனிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா, அக்பர்அலி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.