நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு

ஆனைமலையில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.
ஆனைமலை
ஆனைமலையில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.
நெல் சாகுபடி
ஆனைமலை மற்றும் அதனை சுற்றி உள்ள வடக்கலூர் அம்மன் கோவில், பெரிய அணை, காக்கா கொத்தி பாறை, உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகளின் தங்களது விளைநிலங்களில் கோ-51, ஏ.எஸ்.டி.-16, ஏ.டி.டி.-36 உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டு உள்னர். இதற்கு ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு வழியாக விவசாயிகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தண்ணீர் வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது நெல் அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கொள்முதல் மையம்
இதை ஏற்று தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிப கழகம் சார்பில் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேரடி நெல் கொள்முதல் மையத்தை, கோவை மாவட்ட மேலாளர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். இதில் அரசு நிர்ணயித்துள்ள விலையான சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 160 மற்றும் பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 115 என கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு வங்கி கணக்கு புத்தகம், ஆதார், அடங்கல், நில உரிமையாளர் ஆவணம் ஆகியவற்றை கொண்டு விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைவான விலை நிர்ணயம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 865 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழக அரசு அதை விட குறைவாகவே விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆண்டு போதிய அளவு இடுபொருட்கள் கிடைக்காததால் 2½ அடி வளரும் நாற்றுகள் 1½ அடி மட்டுமே வளர்ந்துள்ளது. இதனால் போதிய அளவு விளைச்சல் கிடைக்கவில்லை. மேலும் பெரிய அணை உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்துகிறது. 5 ஆயிரத்து 400 ஏக்கருக்கு தமிழக அரசால் ஒரு அறுவடை எந்திரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நஷ்டம் அடையும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






