வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம்:
வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள், வாகன பவனி, அன்னதானம் மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுசூதன பெருமாள் கோவில்
பிரசித்தி பெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 4.15 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 5 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியே பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் சொர்க்கவாசல் வழியே வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 'ஓம் நமோ நாராயணா' என்ற பக்தி கோஷத்துடன் பெருமாள் கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
108 திவ்ய தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, 4.30 மணிக்கு உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. 4.45 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியே பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சொர்க்கவாசல் வழியே சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், சுசீந்திரம் ஆசிரமம் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆதிகேசவப்பெருமாள் கோவில்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நேற்று காலை நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளி உணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கலச பூஜை, உஷ பூஜை, உச்ச பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. காலை பூஜை முடிந்த பின்னர் ஒற்றைக்கல்லில் பக்தர்கள் ஏறி மூன்று வாசல்கள் வழியாக மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மாலையில் பல்வேறு மலர்களால் புஷ்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் பிரகார விளக்கணி மாடத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடந்தது. பெண்களும் சிறுமிகளுடம் ஆர்வமுடன் போட்டி போட்டுக்கொண்டு விளக்கேற்றினர். லட்ச தீபம் ஏற்றப்பட்டபோது கோவில் ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது. இரவு கருவறையின் வடக்கு வாசலில் அமைக்கப்பட்டிருந்த சொர்க்கவாசல் வழியாக ஆதிகேசவப்பெருமாள் ஸ்ரீபலி பூஜைக்காக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திரளான பக்தர்கள் சாமி தரினம்
இதேபோல் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில், கோட்டார் ஏழகரம் பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை நடந்தது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் நேற்று அதிகாலையில் திரளான ஆண்களும், பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.