வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரிவரதராஜ பெருமாள்

வைகுண்ட ஏகாதசியையொட்டி பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் (பரமபத வாசல்) திறப்பு நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு பெருமாளுக்கு சந்தனம், பன்னீர், நெய், பால் உள்பட 12 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. சொர்க்க வாசல் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக சொர்க்க வாசல் வழியாக கருட வாகனத்தில் பவனி வந்த பெருமாளை, ஆழ்வார்கள் பல்லக்கில் வந்து வரவேற்றனர். அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா... என்று கூறியபடி பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருவீதி உலா

பெருமாள் திருவீதி உலா பின்னர் கோவில் வளாகத்தில் பெருமாளும், ஆழ்வார்களும் வீற்றிருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சொர்க்க வாசல் பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

லட்சுமி நரசிம்மர் கோவில்

பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, பாராயணமும் நடந்தது. அதை தொடர்ந்து 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சாற்றுமறை நடைபெற்று, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு 10 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஆனைமலை

இதே போன்று ஜமீன்ஊத்துக்குளி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதே போல் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் அதிகாலையிலேயே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைமலையில் உள்ள ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பெருமாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பக்தர்களும் சொர்க்கவாசல் வழியாக வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

நெகமம்

நெகமம், காட்டம்பட்டி புதூர், செட்டியக்காபாளையம், வடசித்தூர் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story