புதுக்கோட்டையில் பா.ஜனதா அலுவலகம் திறப்பு


புதுக்கோட்டையில் பா.ஜனதா அலுவலகம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை

பா.ஜனதா அலுவலகம் திறப்பு

புதுக்கோட்டையில் திருவப்பூரில் சின்ன ரெயில்வே கேட் அருகில் மாவட்ட பா.ஜனதா அலுவலகம் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் சொந்த கட்டிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் தேசிய தலைவர் நட்டா காணொலி காட்சி மூலம் பா.ஜனதா அலுவலகத்தை திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பா.ஜனதா மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கட்டிடத்தை செயல்பாடு உள்ள அலுவலகமாக மாற்றும் போது கட்சி பணி கடைக்கோடியிலும் சிறப்பாக நடைபெறும். நவீன உலகத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்பட பல சாதனங்கள் இருந்தாலும் முடிவெடுக்க கூடிய இடம் அலுவலகமாக இருக்கும்.

கட்சி பணியாற்றுதல்

கட்சி பணி என்றால் டுவிட்டரில் பதிவு போட்டால் ஒரு நாள் பெரிய மனுசன் ஆகிவிடலாம் என்றால் இல்லை. தமிழகத்தில் ஒரே மாதிரியான கருத்தை அறிவாலயம் என்ன சொல்கிறதோ அதனையே சொல்கிற இந்த கால கட்டத்தில் நாம் இன்னும் துரிதமாக கட்சி பணியாற்ற வேண்டும். இன்றைய அரசாங்கம் தமிழகத்தில் இருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் அரசியல் களத்தில் இருந்து தூக்கியெறியப்படாவிட்டால் தமிழர்களை காப்பாற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். தமிழனை காப்பாற்றுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் நடைபெறுகிற இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். கட்சிக்கான வழிகளை உருவாக்க ஒரு மையமாக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நிர்வாகிகள் முடிவெடுத்து பணியை வேகமாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், மேற்கு மாவட்ட பொருளாளர் வி.முருகானந்தம் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி கொடியை எச்.ராஜா ஏற்றி வைத்து, அலுவலகத்தை பார்வையிட்டார்.


Next Story