முக்கூடலில் புதிய மகளிர் கலைக்கல்லூரி திறப்பு

முக்கூடலில் புதிய மகளிர் கலைக்கல்லூரியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடலில் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக தென்பகுதியில் பெண்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு கொடுக்கும் கல்வி அவருக்கு மட்டுமானது அல்ல, அவரது குடும்பத்திற்கும் இந்த சமுதாயத்திற்கானதும் ஆகும் என்றார்.
விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, சிவப்பிரகாசம், தொழில் அதிபர்கள் ரப்பானி கதிரேஷ் ராம்சேட், பூமி பாலகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், பாலகன் டிரஸ்ட் கமலா சவுந்தரராஜன், இந்திரா குமரேசன், கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






