1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - ரோஜாப்பூ, இனிப்புகள் வழங்கி வரவேற்பு
கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை,
2022-23 கல்வி ஆண்டுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களில் தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.
கோடை வெயில் கடுமையாக இருந்த காரணத்தினால் பள்ளி மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 12-ந் தேதியன்று 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும், மாணவர்களுக்கும், ஜூன் 14-ந் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து.
அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கும், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் கல்வி பயில வரும் மாணவ மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ரோஜாப்பூ, சாக்லேட் மற்றும் பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிலையில், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர் மாணவிகளை பெற்றோர் அழைத்து வந்து அவர்கள் பயிலும் பள்ளிகள் விட்டு சென்றனர். பள்ளிக்கு வரும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும் உற்சாக இமோஜி வரைபடங்களை கொண்டும், ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் வழங்கி குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளது. இது தவிர எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்கும் இன்று வகுப்பு நடைபெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.