பள்ளிகள் திறப்பு: தனியார் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
தமிழகம் முழுவதும் வருகிற 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனங்களில் குறிப்பிட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளனவா, அவசர காலத்தில் வெளியேற வசதிகள் உள்ளதா, தீயணைப்பு கருவிகள் மற்றும் பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி இருக்கிறதா என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் வாகன ஓட்டுனர்களின் லைசென்ஸ், அவர்களின் வயது விபரம் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.