ரூ.12½ லட்சத்தில் சூரிய சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு திறப்பு


ரூ.12½ லட்சத்தில் சூரிய சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு திறப்பு
x

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் ரூ.12½ லட்சம் மதிப்பில், சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்பதன கிடங்கை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

குளிர்பதன கிடங்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றது. ராணிப்பேட்டை உழவர் சந்தையில் தினசரி சுமார் 60 விவசாயிகள், 4 மகளிர் சுய உதவி குழுக்கள், 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியவற்றின் மூலம் 20 முதல் 25 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள், மலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

விவசாயிகள் மற்றும் இதர விற்பனையாளர்கள் கொண்டு வரும் காய்கறிகள், பழங்கள், மலர்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை விற்பனை போக இருப்பதை சேமித்து வைக்கவும், அறுவடை செய்தவுடன் கொண்டு வந்து சேமித்து, புத்தம் புதிய பொலிவுடன் நுகர்வோருக்கு வழங்கிடவும் தமிழக அரசு சூரிய சக்தி மூலம் இயங்கும் 80 குளிர்பதன கிடங்குகளை தமிழகம் முழுவதும் அமைத்துள்ளது.

அமைச்சர் திறந்து வைத்தார்

அதனடிப்படையில் ராணிப்பேட்டை உழவர் சந்தையில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள் கெட்டு போகாமலும், சேதமடையாமலும் சேமித்து வைத்து மறு விற்பனை செய்ய வாய்ப்பாக அமைகிறது. உழவர் சந்தை விவசாயிகளுக்கு இச்சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த குளிர்பதன கிடங்கின் திறப்பு விழா ராணிப்பேட்டை உழவர் சந்தையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குளிர் பதன கிடங்கினை திறந்து வைத்தார்.

தானியங்கி மஞ்சப்பை எந்திரம்

மேலும் ராணிப்பேட்டை உழவர் சந்தையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், முருகப்பா மார்கன் தெர்மல் செராமிக்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்.நிதி திட்டத்தில், ரூ.1½ லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி எந்திரத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தானியங்கி எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

இந்த மஞ்சப்பை தானியங்கி எந்திரத்தில் 500 எண்ணிக்கையிலான மஞ்சப்பைகளை நிரப்ப முடியும். 10 ரூபாய் நாணயம் அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயம் அல்லது 10 ரூபாய் நோட்டு செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, வேளாண்மை விற்பனைத் துறை துணை இயக்குனர் சீனிராஜ், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நிர்வாக அலுவலர் முருகன், உதவி நிர்வாக அலுவலர் கோபிநாத், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story