பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 2 Jan 2023 6:45 PM GMT (Updated: 2 Jan 2023 6:45 PM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிந்தா, கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீலகிரி

ஊட்டி,

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிந்தா, கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. இதன்படி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊட்டி பழைய அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது.

தொடர்ந்து 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்ட படி சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை யொட்டி சொர்க்கவாசலுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்கள் சாமி தரிசனம்

இதேபோல் ஊட்டி புது அக்ரஹாரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியையொட்டி முக்கிய வீதிகளில் பெருமாள் வீதி உலா வந்தார். ஊட்டியில் கடுங்குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சுவாமி வீதி உலாவுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. இந்த ஆண்டு வீதி உலா அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் ஊட்டி அருகே எச்.பி.எப். பெருமாள் கோவில், வண்ணாரப்பேட்டை பெருமாள் கோவில் மற்றும் குன்னூர் வண்டிச்சோலையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


Next Story