பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பெரம்பலூர்

சொர்க்கவாசல் திறப்பு

பெரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் செய்யப்பட்டு திவ்யரூப தரிசனத்துடன் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை நம்பெருமாள் உற்சவமூர்த்திக்கு கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் தலைமையில் பட்டர்கள் குழுவினர் சிறப்பு பூஜை செய்தனர். வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கொடிமரம் வழியாக நாழிகேட்டான் வாசலுக்கு வந்தார். பின்னர் ஐதீகப்படி சொர்க்கவாசல் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.

நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

இதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார். அப்போது அங்கு அதிகாலை 5 மணி முதலே காத்திருந்த பக்தர்கள் பரமபதவாசல் வழியே வந்த நம்பெருமாளை கோவிந்தா... கோபாலா... என்ற கோஷங்கள் முழங்க தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள் மற்றும் மூலவர் பெருமாள், மரகதவல்லி தாயாரை தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு பிறகு பரமபதவாசல் வழியாக வெளியே வந்தனர்.

வெள்ளி கருட வாகனத்தில் வீதி உலா

பின்னர் கோவிலின் பரம்பரை ஸ்தானீகர் பொன்.நாராயண அய்யர் மற்றும் மணிகண்டன் அய்யர் ஆகியோர் வேத விண்ணப்பம் வாசித்த பிறகு கட்டியம் கூற ஸ்தானீகருக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக சன்னதி தெருவிற்கு வந்த பெருமாள், கோவில் எதிரே உள்ள கம்பம் ஆஞ்சநேயரை 3 முறை வலம் வந்து ஆண்டாள் சன்னதி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையொட்டி கம்பம் ஆஞ்சநேருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று இரவு வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு, மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க திருவீதி உலா நடந்தது. சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை துவாதசி திருவாராதனை உற்சவம் நடக்கிறது.

மங்களமேடு

இதேபோல் எசனை வரதராஜபெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மேலும் மங்களமேட்டை அடுத்த வாலிகண்டபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத ஆண்டாள் நாச்சியார், பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் வரதராஜ கம்ப பெருமாள் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

1 More update

Next Story