பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதநாராயணபெருமாள்
தொட்டியம் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகித் தாயார் கோவிலில் கடந்த 23-ந்தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. சிரக நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்றது. பின்னர் ஆழ்வார்கள் பாராயணம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க வேதநாராயணபெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை வழிபட்டனர்.
அன்பில் சுந்தரராஜபெருமாள்
லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.இதையடுத்து, திருமாணி மண்டபத்தில் வடிவழகிய நம்பி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
முசிறி லட்சுமி நாராயணபெருமாள்
முசிறி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4.53 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கொலுமண்டபத்தில் வீற்றிருக்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் பரமபத வாசல் வழியாக பெருமாள் வெளிவர திருவீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொலு மண்டபத்தை அடைந்து சுற்று முறை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கோவிந்தா கோபாலா என்ற கோஷம் போட்டு பெருமாளை தரிசித்தனர்.
கே.கே.நகர் ஸ்ரீனிவாச பெருமாள்
திருச்சி கே.கே. நகர் இந்திரா நகர் ஸ்ரீ அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5.35 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
சோமரசம்பேட்டை
சோமரசம்பேட்டை அருகே உள்ள சோழங்கநல்லூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவிலில் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தா.பேட்டை
தா.பேட்டை அருகே மாவலிபட்டி கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வெங்கடேச பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி சொர்க்க வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கருட வாகனத்தில் வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மாவலிபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.