கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பார்வையாளர்கள் ஓய்வு அறை திறப்பு
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பார்வையாளர்கள் ஓய்வு அறை திறக்கப்பட்டது.
கோவை
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுப்பது மட்டுமல்லாமல் பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் தரைத்தளத்தில் வரவேற்பு அறையின் அருகே பார்வையாளர்கள் ஓய்வு அறை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டது.
இதில் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பார்வையாளர்கள் ஓய்வு அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அதை பார்வையிட்டார். இந்த ஓய்வு அறை முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியை கொண்டது. இதில் தாய்ப்பால் ஓய்வு அறையும் இருக்கிறது. மேலும் இந்த அறையில் நூலக வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
கமிஷனர், துணை கமிஷனர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் இந்த அறையில் காத்திருப்பார்கள். மேலும் இந்த அறையில் பல்வேறு அறிவிப்புகள், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்த தகவல்களும் இடம்பெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம், சுகாசினி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.