2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பொள்ளாச்சி
ஆழியாறு அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
2-ம் போக சாகுபடி
ஆழியாறு அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா என இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. குறுவை பருவத்துக்கு அறுவடை முடிந்து தற்போது சம்பா பருவத்துக்காக நாற்றாங்கால் பணிக்காக விவசாயிகள் நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட அரசுக்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்துரு அனுப்பினர். அதன்படி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவு பிறப்பித்தது.
1,235 மில்லியன் கன அடி
இதையடுத்து மின் உற்பத்திக்கு தண்ணீர் செல்லும் வழியில் நேற்று வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலு, உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பங்கேற்றனர். தண்ணீர் திறக்கப்பட்டபோது மலர் தூவி வரவேற்கப்பட்டது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தற்போது அணையின் நீர்மட்டம் 119.30 அடியாக உள்ளது. 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்களின் 2-ம் போக பாசனத்துக்கு இன்று(நேற்று) முதல் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை 182 நாட்களுக்கு தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினை பொறுத்து 1,235 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.