வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
திட்டக்குடி அருகே வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டார்.
ராமநத்தம்:
திட்டக்குடி அருகே கீழ்செருவாயில் 29.72 அடி கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 24059 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியான சேலம், ஆத்தூர் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக வெள்ளாறு வழியாக வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து வந்தது.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 27.50 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் பாசன வசதிக்காக நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட்டார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் தனசேகரன் மற்றும் உதவி பொறியாளர்கள் சுதர்சன், பாஸ்கரன், வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
120 நாட்களுக்கு...
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 175 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து 120 நாட்களுக்கு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து இடைச்செருவாய் ரேஷன் கடையில் அமைச்சர் சி.வெ.கணேசன்ஆய்வு மேற்கொண்டார். அப்போது அத்தியாவசிய பொருட்கள் சரியான முறையில் எடைபோட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறதா? என்று சரிபார்த்தார்.