புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிப்படி அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் கால்வாய்களில் நேற்று தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் அவர் கால்வாயில் மலர்தூவி வரவேற்றார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் நாட்ராயன், உதவி பொறியாளர்கள் குமாரவேல், கார்த்திக் கோகுல், பிரகாஷ், திலக் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

2,400 மில்லியன் கன அடி

முதல்-அமைச்சரின் ஆணைப்படி பி.ஏ.பி. திட்ட தொகுப்பில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி கால்வாய்-அ மண்டலத்தில் 11,616 ஏக்கரும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய்-ஆ மண்டலத்தில் 5623 ஏக்கரும், சேத்துமடை கால்வாய்-அ மண்டலத்தில் 2515 ஏக்கரும், ஆழியாறு ஊட்டுக்கால்வாய்-அ மண்டலத்தில் 2362 ஏக்கர் பாசன பகுதிகள் சேர்த்து மொத்தம் 22,116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பாசன பரப்பில் உள்ள நிலங்களுக்கு இன்று (நேற்று) முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முடிய 120 நாட்களில் உரிய இடைவெளி விட்டு 75 நாட்களுக்கு மொத்தம் 2,400 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீரினை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறக்க சப்-கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது பாசன காலம் குறைக்கப்பட்டு இருப்பதால் தண்ணீர் திறக்க கூடாது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் சிறப்பு அரசாணை பெற்று பாசன காலத்தை 135 நாட்களாக நீட்டிக்க வேண்டும். அதுவரைக்கும் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் எடுக்க மாட்டோம் என்றனர். அதிகாரிகள் அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கையை தெரியப்படுத்தி பாசன காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சம்மதம் தெரிவித்தனர். இதுகுறித்து புதிய ஆயக்கட்டு பாசன நலச்சங்க செயலாளர் செந்தில் கூறியதாவது:-

தண்ணீர் எடுக்க மாட்டோம்

1967-ல் இருந்து தண்ணீர் திறந்ததில் இருந்து 135 நாட்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த முறை 5 சுற்று தண்ணீர் கொடுத்து விட்டு 120 நாட்களுக்குள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். ஒரு பயிர் பாசனம் 135 நாட்கள் தேவைப்படும். சம்பந்தம் இல்லாமல் 1967-ல் போடப்பட்ட அரசாணையை எந்த முன்னறிவிப்பு இல்லாமலும், விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் பாசன காலத்தை குறைத்ததற்கு விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. மேலும் தண்ணீர் திறப்பு குறித்த அரசாணையில் எத்தனை ஏக்கர் பாசனம் பெறுகிறது என்பதை குறிப்பிடவில்லை. 22,116 ஏக்கர் என்றும், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று இருக்க வேண்டும். ஆனால் எதுவும் இல்லை. தற்போது அரசாணையை மதித்து தண்ணீர் திறக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 15 நாட்களுக்கு நிரந்தர அரசாணை வரும் வரை பாசன சபை தலைவர்கள் யாரும் பாசனத்திற்கு தண்ணீரை எடுக்க மாட்டோம். விவசாயிகளுக்கு தெளிவான எழுத்துப்பூர்வமான பதில் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story