பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 8 Jun 2023 6:15 AM IST (Updated: 8 Jun 2023 6:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

பழைய ஆயக்கட்டு

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் ஒப்பந்தப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பழைய ஆயக்கட்டில் அரியாபுரம், பள்ளிவிளங்கால், பெரியணை, வடக்கலூர், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

விழாவில் செயற்பொறியாளர் முருகேசன் கலந்துகொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர். இதில் செயற்பொறியாளர் (மின்சாரம்) ராம்பிரசாத், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன், உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியாறு அணை மூலம் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல் போகத்திற்கு இன்று (நேற்று) முதல் வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி முடிய 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போதைய நீர்இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து அணையில் இருந்து 1,205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்றனர்.


Next Story