ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
நிலப்பாறையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.
வள்ளியூர்:
நிலப்பாறையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.
ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை தண்ணீரை வறண்ட ராதாபுரம் கால்வாயில் திறக்க வேண்டும் என்று ராதாபுரம் தாலுகா விவசாயிகள் சபாநாயகர் அப்பாவு மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பேச்சிப்பாறை அணை தண்ணீரை கன்னியாகுமரி மாவட்டம் நிலப்பாறை பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாயில் திறந்து விடுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி நிலப்பாறை பகுதியில் இருந்து பேச்சிப்பாறை அணை தண்ணீரை ராதாபுரம் கால்வாயில் சபாநாயகர் அப்பாவு நேற்று திறந்து வைத்தார். ராதாபுரம் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் அனைவரும் மலர்கள் தூவி வரவேற்றனர்.
பின்பு சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
17 ஆயிரம் ஏக்கர் நிலம்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம் நிலப்பாறை பகுதியில் இருந்து பேச்சிப்பாறை அணை தண்ணீரை ராதாபுரம் கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையில் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை தினமும் வினாடிக்கு 150 கன அடி வீதம் திறந்து விடப்படும்.
இதன்மூலம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள லெவிஞ்சிபுரம், கருங்குளம், பழவூர், அடங்கார்குளம், அழகனேரி, தனக்கர்குளம், கூடங்குளம், பரமேஸ்வரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 52 குளங்கள் மூலம் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் உதவி கலெக்டர் சேதுராமலிங்கம், வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, திருமூலநகர் பங்குதந்தை பீட்டர் பாஸ்டியன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.