பாசனத்துக்காக கோமுகி அணையை திறந்தாலும் பயன் இல்லை


பாசனத்துக்காக கோமுகி அணையை திறந்தாலும் பயன் இல்லை
x

கோமுகி அணையை பாசனத்துக்காக திறந்தாலும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி நிரம்பியதும் அதில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது வழக்கம். அணையின் புதிய பாசனம் மற்றும் பழைய பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படு்ம் தண்ணீர் மூலம் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு பெய்த தொடர்மழையால் கோமுகி அணை நிரம்பியது. இதையடுத்து சம்பா சாகுபடி பாசனத்துக்காக வருகிற அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் அணையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாசன வாய்க்கால்களை தூர்வார அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தூர்ந்துபோன வாய்க்கால்கள்

இதனால் பழைய பாசனம், புதிய பாசன வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்கள் தூர்ந்து போய் காணப்படுகிறது. குறிப்பாக பரிகம் பாசன வாய்க்காலில் இருந்து கரடிசித்தூர், தாவடிப்பட்டு வழியாக திருக்கனூர் வரை செல்லக்கூடிய கிளை வாய்க்கால் மற்றும் ஏரிகளுக்கு செல்லும் கிளை வாய்க்கால்கள் இருப்பது தெரியாத அளவிற்கு அங்கு முட்செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.

வாய்க்கால்கள் தூர்வாராத காரணத்தால் அணையின் கடைமடை பகுதியான சின்னசேலம் மற்றும் ஆலத்தூர் வரை தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 வாரத்துக்கு முன்பு பெய்த தொடர் மழையால் கோமுகி அணை நிரம்பியுள்ளது. மேலும் விரைவில் பருவமழை தொடங்கவுள்ளது.

அணை நிரம்பியும் பயன் இல்லை

இதனால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என கருதினோம். ஆனால் பாசன வாய்க்கால்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சீராக தண்ணீர் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாசனத்துக்காக அணை திறந்தாலும் எங்களுக்கு எந்த பயனும் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. எனவே எங்களை போன்ற விவசாயிகள் நலன் கருதி பாசன வாய்க்கால்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story