திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் குடமுழுக்கு விழா:கோவிலை சுற்றி 30 அடி தூரத்துக்கு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்பாடு


திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் குடமுழுக்கு விழா:கோவிலை சுற்றி 30 அடி தூரத்துக்கு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 27 Jun 2023 12:08 AM IST (Updated: 27 Jun 2023 4:15 PM IST)
t-max-icont-min-icon

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி கோவிலை சுற்றி 30 அடி தூரத்துக்கு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி கோவிலை சுற்றி 30 அடி தூரத்துக்கு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பிலியப்பன் கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோவில் என அழைக்கப்படும் வெங்கடாசலபதி கோவில் பூலோக வைகுந்தம், திருவின்னகர் என்றெல்லாம் போற்றப்படுகிறது. இங்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு, ரூ.3½ கோடி மதிப்பில் திருப்பணி வேலைகள் நடந்தன.

வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) வெங்கடாசலபதி கோவிலுக்கும், வடக்கு வீதியில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடக்கிறது.

குடமுழுக்கை தொடர்ந்து 29-ந் தேதி இரவு பெருமாள், தாயார் தங்க கருட சேவையும், பெரியாழ்வார், நிகமாந்த மகாதேசிகன் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

பிரம்மாண்ட யாக சாலை

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி கோவில் வளாகத்தில் 28 வேதிகைகள் 34 யாக குண்டங்கள் என பிரம்மாண்ட யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று 2-வது மற்றும் 3-வது கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது, 5-வது கால யாகசாலை பூஜை நடக்கிறது. கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் பக்தர்களுக்கு பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிறப்பு ஏற்பாடு

குடமுழுக்கு அன்று கோவிலுக்குள் மதியம் 12 மணி வரை ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் கோவிலை சுற்றி நான்கு புறமும் குடமுழுக்கை காண கூடி நிற்கின்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவிலில் இருந்து நான்கு புறமும் 30 அடி தூரம் வரை பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story