சட்டப்பேரவையில் நிலக்கரி திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு..!


சட்டப்பேரவையில் நிலக்கரி திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு..!
x

சட்டப்பேரவையில் நிலக்கரி திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசு சார்பில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு நிலக்கரி எடுக்க கூடுதல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

நெய்வேலி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தற்போது காவிரி டெல்டாவிலும் நிலக்கரி எடுக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்து பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகள் இடம்பெற்று உள்ளன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும்.

ஏற்கனவே, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த இடத்தில் விவசாய பணிகளை தவிர வேறு எந்த வேலைகளையும் மேற்கொள்ள முடியாது.

அப்படி இருக்கும்போது, இந்த இடங்களில் எப்படி நிலக்கரி எடுக்கும் பணியை மேற்கொள்ள முடியும்? என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழகஅரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நிலக்கரி திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பேரவையில் விளக்கம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story