எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்ட நோக்கத்தை திசை திருப்ப முயற்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காகவே அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மோடி தலைமையில் இருக்கின்ற பா.ஜ.க.வினுடைய ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தை கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம். அதைத்தொடர்ந்து, 2 நாட்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் 24 கட்சியினுடைய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பீகாரிலும், தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக தொடர்ந்து கூட்டப்படக்கூடிய கூட்டம் இது.
பா.ஜ.க. ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இது. அமலாக்கத்துறை இன்றைக்கு அவர்களால் ஏவப்பட்டு, ஏற்கனவே வடமாநில பகுதிகளில் அந்த பணிகளை செய்துகொண்டிருந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும், அந்த பணியை தொடங்கி இருக்கிறார்கள். ஆகவே, அதைப்பற்றியெல்லாம் கிஞ்சுற்றும் தி.மு.க. கவலைப்படவில்லை.
பொய் வழக்கு
உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடி இல்லத்தில், அமலாக்கத்துறையின் மூலமாக சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், இந்த வழக்கை பொறுத்தவரையில், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, புனையப்பட்ட பொய் வழக்கு இந்த வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டு காலத்திற்கு முன்பு போடப்பட்ட வழக்கு. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம், இதைப்பற்றி எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை.
அண்மையில் கூட பொன்முடி மீது கடந்த கால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த 2 வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆகவே, இந்த வழக்கை பொறுத்தவரையிலே சட்டரீதியாக அவர் இதனை நிச்சயமாக சந்திப்பார்.
தயாராக இருக்கிறோம்
எது, எப்படி இருந்தாலும், வர இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில், இதற்கெல்லாம் நிச்சயமாக மக்கள் பதில் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், பீகாரிலும், கர்நாடக மாநிலத்திலும் இதைத்தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடைபெறவிருக்கக்கூடிய இந்த கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக, அவர்கள் செய்து கொண்டிருக்கக்கூடிய தந்திரம்தான் தவிர, வேறல்ல. இதை எல்லாம் நிச்சயமாக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடகம்
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அமலாக்கத்துறை சோதனை உங்களுக்கு கொடுக்கக்கூடிய நெருக்கடியாக பார்க்கிறீர்களா?
பதில்:- ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் கவர்னர் தேர்தல் பிரசாரத்தை எங்களுக்காக நடத்திக்கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. ஆகவே, தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்.
கேள்வி:- கடந்த முறை நீங்கள் பீகார் சென்றபோது அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் 'ரெய்டு' நடந்தது, பிறகு இரண்டாவது முறையாக பெங்களூரு செல்லும்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் 'ரெய்டு' நடக்கிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- இது எல்லாம் சகஜம், சர்வ சாதாரணம். மக்களை திசை திருப்புவதற்காக செய்யக்கூடிய நாடகம். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாதா?. நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். உங்களுக்கே இது நியாயமா?, இதை எதற்காக செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
காவிரி விவகாரம் பேசுவீர்களா?
கேள்வி:- பெங்களூருக்கு செல்கிறீர்கள், காவிரி விவகாரம் பற்றி பேசுவீர்களா?
பதில்:- காவிரி பிரச்சினை பொறுத்தவரையிலே, மேகதாது பிரச்சினை பொறுத்தவரையிலே என்றைக்கு கலைஞர் அதிலே ஒரு முடிவெடுத்து அந்த பணியை நிறைவேற்றி கொண்டிருந்தாரோ, அந்த பணியில் கிஞ்சிற்றும் மாறாமல் அதை கடைப்பிடிப்போம். இந்த கூட்டம் என்பது, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக நடைபெற உள்ள கூட்டம். காவிரி பிரச்சினை பற்றிய கூட்டம் அல்ல, இன்னும் சொல்லப்போனால், இப்போது இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறதே தவிர வேறு அல்ல.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
டி.கே.சிவக்குமார் வரவேற்றார்
மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று பகல் 12 மணியளவில் பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரியும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான டி.ஆர்.பாலு சென்றார். அவர்களை கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், மதியழகன், கர்நாடக மாநில தி.மு.க. செயலாளர் ராமசாமி உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
விருந்தில் பங்கேற்றார்
அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் காரில் சதாசிவநகரில் உள்ள தனது சகோதரி செல்வி வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் மாலையில் சோனியா காந்தி அளித்த விருந்து நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவரை காண கர்நாடக மாநில தி.மு.க. நிர்வாகிகள், ஓசூர், கிருஷ்ணகிரி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.