எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தது பா.ஜனதாவுக்கு அச்சம் -கே.பாலகிருஷ்ணன் பேட்டி
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தது பா.ஜனதாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவில்,
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
சுந்தரகாண்டம், ராமாயணம், மகாபாரதத்தை படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை 15 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர்.
2-வது இடம்
தமிழகத்தில் உள்ளாட்சி பொறுப்புகளில் பெண்கள் இருந்தாலும், அதிகாரம் அவர்கள் சார்ந்த ஆணின் கையில் உள்ளது. தமிழகத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. 2019-2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அதிகமான குடும்ப வன்முறை நடந்ததில் இந்திய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. சிதம்பரத்தில் தீட்சிதர் ஒருவர் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். கவர்னர் இந்த நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும். ஆனால் அவர் தீட்சிதர்களுக்கு ஆதரவாக காவல்துறையை விமர்சித்து பேசியுள்ளார்.
கவர்னர் ரவி எல்லை தாண்டி பேசி வருகிறார். சனாதன தர்மத்தை எதிர்த்து பேசிய வள்ளலாரையே சனாதன தர்மத்தின் உச்சம் என்று பேசி இருக்கிறார்.
பா.ஜனதாவுக்கு அச்சம்
தமிழக கவர்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரகடனமாக செயல்படுகிறார். பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பா.ஜனதா விமர்சித்து வருகிறது. இதன் மூலமாக அவர்களுக்குள் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருப்பது பா.ஜனதாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் போது மாறுபட்ட கருத்துகள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக இருந்தால் தேர்தல் கூட்டணிக்கு வரமாட்டோம் என்று அ.தி.மு.க.வினர் கூறினார்கள். ஆனால் கூட்டணி வைக்காமல் போய்விடுவார்களா?.
அமலாக்கத்துறை மூலம்...
விலைவாசி உயர்வுக்கு பா.ஜனதா அரசின் பொருளாதார கொள்கைதான் காரணம். மின் கட்டணத்தை தற்போது 25 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூறவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். அவரை விசாரிக்க சில விதிமுறைகள் உள்ளன. அதை மீறி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. முறைப்படி சம்மன் அனுப்பி அவரை விசாரித்து இருக்கலாம். அமலாக்கத்துறை மூலமாக எதிர்க்கட்சிகளை பா.ஜனதா மிரட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.