ஆதிதிராவிடர் பள்ளிகளை இணைக்க எதிர்ப்பு:கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்த ஊழியர்கள்
ஆதிதிராவிடர் பள்ளிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆசிரியர்கள், காப்பாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். அதன்படி வருகிற 15-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானிய கோரிக்கை வருகிற 18-ந்தேதி நடக்க உள்ளதால், அதுவரை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என்று முடிவு செய்தனர்.
அதன்படி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள மாணவ, மாணவிகளின் விடுதிகளின் காப்பாளர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர். அந்த வகையில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சங்கரசபாபதி, மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். வருகிற 18-ந்தேதி வரை அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற உள்ளதாகவும், இந்த பள்ளிகள் இணைப்பு முறையை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.