நதியுண்ணி கால்வாய் பழைய பாலத்தை அகற்ற எதிர்ப்பு; விவசாயிகள், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


நதியுண்ணி கால்வாய் பழைய பாலத்தை அகற்ற எதிர்ப்பு; விவசாயிகள், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x

அம்பையில் நதியுண்ணி கால்வாய் பழைய பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை- ஆலங்குளம் மெயின் ரோட்டில் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி அருகில் நதியுண்ணிக் கால்வாய் பாலம் பழையதாகவும், மிகக் குறுகலாக இருப்பதால் அதனை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து பணிக்கான டெண்டர்கள் விடப்பட்டு நீண்ட நாட்களாக பணி தொடங்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று பாலத்தை இடிக்கும் முன்பாக தற்காலிக பாதை அமைப்பதற்காக கால்வாயில் கல், மண் ஆகியவற்றை கொட்டி அடைக்கும் பணியை தொடங்கினர்.

தகவலறிந்ததும் அம்பை, ஊர்க்காடு, கோவில்குளம், பிரமதேசம், சாட்டுப்பத்து ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திரண்டனர். இன்னும் சில நாட்களில் விவசாயத்திற்கு நதியுண்ணி கால்வாயில் தண்ணீர் திறக்க இருக்கும் நிலையில் கால்வாயை அடைக்கவோ, பாலத்தை இடிக்கவோ கூடாது என நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வேலாயுதநகர், ஆசிரியர் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளை பொதுமக்களும் அங்கு வந்தரனர். பாலத்தை அகற்றினால் தங்களது போக்குவரத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி பாலத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அறிந்ததும் அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விஷ்ணுவிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார், அப்போது விவசாயிகள் கோரிக்கையின் படி விரைவில் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். பாலத்தை இடிக்கும் பணியை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story