தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு:அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு:அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

கோயம்புத்தூர்

அன்னூர்

தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

விவசாயிகள் எதிர்ப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3,850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக தொழிற்பேட்டை (சிப்காட்) அமைக்க அரசு முடிவு செய்தது. இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.. மேலும் கோவை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூரில் தொழிற்பேட்டை (சிட்கோ) அமைப்பதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே போராட்ட குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்தி 14-ந் தேதி 500-க்கு மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.

முற்றுகையிட்டு போராட்டம்

இதன் தொடர்ச்சியாக லக்கேபாளையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அன்னூர் தாலுகாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக முடிவெடுத்தனர். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் அன்னூர் தாலுகா அலுவலகம் முன்பு சுமார் 2000 விவசாயிகளுடன் கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கான நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டும் இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்க மாநில தலைவர் வேணுகோபால், நமது நிலம் நமதே அமைப்பின் தலைவர் குமார் ரவிக்குமார், செயலாளர் ராஜன் உட்பட ஏராளமான விவசாயிகள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தைெயாட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, காரமடை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story