அசகளத்தூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
அசகளத்தூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தொிவித்து கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள், கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
அசகளத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அந்த கடையில் மது குடித்துவிட்டு, வந்தவர்களால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. எனவே கிராம மக்கள் ஒன்று கூடி கோரிக்கை வைத்ததன் பேரில், அந்த கடை அகற்றப்பட்டு, தற்போது எங்கள் ஊருக்கு அருகே உள்ள ஈயனூரில் இயங்கி வருகிறது.
மேலும், தியாகதுருகத்தில் உள்ள டாஸ்மாக் கடை, காலி செய்யப்பட்டு அசகளத்தூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் அரசு பள்ளி அருகில் கடையை வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இங்கு கடை வைத்தால், மதுகுடிக்க வருபவர்களால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே கிராம மக்கள் ஒன்று கூடி மதுபான கடை வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். எனவே கிராமத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பள்ளி மாணவ, மாணவிகள்,கிராமத்து பெண்களின் பாதுகாப்பு கருதி, அசகளத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.