அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு: கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்


அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு: கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
x

ராகுல்காந்தியிடம் நடத்தப்பட்டு வரும் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சென்னை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழக பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, துணைத்தலைவர் நாசே ராமச்சந்திரன், பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மகிளா காங்கிரஸ் தலைவர் ஆர்.சுதா உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சந்தர்ப்பவாத அரசியல்

ஆர்ப்பாட்டத்தின்போது கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

'நேஷனல் ஹெரால்டு' நிறுவனம் என்பது காங்கிரசின் சொத்து. அது காங்கிரஸ் தலைவர்கள் பெயர்களில் இருக்கிறது. கட்சி சார்பில் அறக்கட்டளைக்கு கடன் தரமுடியுமே தவிர, அதன் பங்குகளை ஏற்கவே முடியாது. எனவே இப்போதுள்ள காங்கிரஸ் தலைவர்கள் பெயரில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இதில் மூடிமறைக்க என்ன இருக்கிறது?

சந்தர்ப்பவாத அரசியல் ஒருபோதும் எடுபடாது. மக்கள் நிச்சயம் இதற்கெல்லாம் தக்க பதில் அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கொடுமைப்படுத்தி வருகிறார்கள்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், "விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறையினர் ராகுல்காந்தியை கொடுமைப்படுத்தி வருகிறார்கள்", என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தமிழ்செல்வன், காண்டீபன், தளபதி பாஸ்கர், தலைமை நிலைய செயலாளர் திருவான்மியூர் மனோகரன், ஆர்.டி.ஐ. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கராத்தே ரவி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், நாஞ்சில்பிரசாத், ரஞ்சன்குமார், முத்தழகன், சிவராஜசேகரன் உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் போராட்டம்

ஆர்ப்பாட்டத்தின்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியினர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து கொண்டிருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் வேகமாக ஓடிச்சென்று கவர்னர் மாளிகை வாசல் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதையடுத்து அவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.

அதேபோல சின்னமலையில் இருந்து கவர்னர் மாளிகை செல்லும் நெடுஞ்சாலையிலும் ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடந்தது. சிலர் போலீஸ் வாகனங்களில் இருந்து இறங்கி வந்தும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

நாடு தழுவிய போராட்டம்

ராகுல் காந்தியிடம் நடத்தப்படுகிற அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நேற்று நடத்தினர்.

டெல்லியில் கவர்னர் மாளிகையை நோக்கி அணிவகுத்த காங்கிரசாரை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டினர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த போராட்டத்தின்போது கட்சியின் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங், மாநில துணைத்தலைவர் விஷ்வ விஜய் சிங், மூத்த தலைவர்கள் வீரேந்திர மதன், முகேஷ் சவுகான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்த போராட்டத்தில் மாநில மந்திரிகள் பிரதாப் சிங், அசோக் சந்தனா, மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மும்பையில் கவர்னர் மாளிகை முன் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை தாண்டிச்சென்று போராட்டம் நடத்த முற்பட்ட மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், மந்திரிகள் அசோக் சவான், பாலாசாகேப் தொராட், வர்ஷா கெயிக்வாட், அமத் தேஷ்முக், அஸ்லம் ஷேக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இப்படி பரவலாக நாடு முழுவதும் காங்கிரசார் கவர்னர் மாளிகைகளை நோக்கி அணிவகுக்க முயற்சித்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தப் போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story