சந்தியாகப்பர் சிலை வைக்க எதிர்ப்பு
திருச்சி அருகே சந்தியாகப்பர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருச்சி அருகே சந்தியாகப்பர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சந்தியாகப்பர் சிலை
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சி மாதா கோவில் தெருவில் சந்தியாகப்பர் ஆலயம் இருந்தது. இந்த ஆலயம் ஊராட்சி இடத்தில் இருந்ததாக கூறி கோர்ட்டில் ஊராட்சி தலைவர் ரேணுகா பார்த்தசாரதி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து, ஆலயம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த ஆலயம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
இதற்கு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரை சந்தித்து முறையிட்டதோடு போராட்டம் நடத்தி வந்தனர்.
மோதல்
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்தவர் சிலர் அங்கு சந்தியாகப்பர் சிலையை வைத்தனர். இதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ரோணுகா பார்த்தசாரதி மற்றும் அவரது தரப்பினர் இங்கு சிலை வைக்க அனுமதி இல்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினருக்கும், மாதா கோவில் தெரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதைத்தொடர்ந்து அங்கு திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து மாதா கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.