காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு
காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
காரைக்குடி
காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன்அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்திய அஞ்சல் துறை சார்பில் குறைந்த தவணை மற்றும் அதிக பிரியமித்துடன் கூடிய ஆயுள்காப்பீடு பாலிசி மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு சூழ்நிலை காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளர்கள் தங்களது தவணை தொகையை செலுத்த தவறிவிடுவதால் அந்த பாலிசி தொகை காலாவதியாகி விடுகிறது. இவ்வாறு காலாவதியான பாலிசிகள் அபாரத தொகை மூலம் தான் புதுப்பிக்கப்படும். தற்போது அஞ்சல் துறை இயக்குனரகம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபாரத தொகையில் இருந்து 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையும், அதிகபட்சம் ரூ.2500 முதல் ரூ.3500 வரை விலக்கு அளிக்கும் வகையில் சலுகை அறிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்துகொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது காலாவதியான பாலிசிகளை புதுபித்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.