ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கூடாது


ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கூடாது
x
தினத்தந்தி 14 March 2023 1:00 AM IST (Updated: 14 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கூடாது என விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஆறு, ஏரி, குளம், கிணறு, வாய்க்கால் நீர்பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எங்கள் சங்கத்திற்கு வாய்க்கால் பாசனம் என்று சொன்னால், நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் ஊராட்சி எல்லையில் இருந்து காட்டுப்புத்தூர் வாய்க்கால் வழியாக திருச்சி மாவட்டம் நத்தம் கிராமம் எல்லை வரை 6 ஆயிரம் ஏக்கர் நிலம் வாய்க்கால் பாசனத்தை நம்பி உள்ளனர்.

பாதிப்பு ஏற்படும்

இந்த வாய்க்காலுக்கு அருகில் ஒருவந்தூரில் இருந்து கொரம்பு மூலமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயத்துக்கும், குடி தண்ணீருக்கும், மழைகாலம் முதல் கோடைகாலம் வரை ஆண்டு தோறும் தண்ணீர் வழங்குகின்றனர். காரணம் ஆற்று பகுதி பள்ளமாகவும், வாய்க்கால் பகுதி மேடாகவும் உள்ளதால் தண்ணீர் வருவதில்லை. தற்போது ஒருவந்தூர் கிராமத்தில் மணல் அள்ளுவதாக தெரியவருகிறது. அதற்கு உண்டான வேலைகள் நடந்தது வருகிறது.

அப்படி மணல் எடுப்பதால், வாய்க்கால் பாசனம் விவசாயம் மற்றும் நிலங்கள் சுத்தமாக வறண்டு பாலைவனமாகும் அபாயம் உள்ளது. மேலும், குடிதண்ணீருக்கு கூடவழி இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிகவனம் செலுத்தி மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தவேண்டும். நிறுத்தாவிட்டால் விவசாயிகளுக்கும், விவசாயம் செய்யும் கூலி தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

உண்ணாவிரதம்

தவறும் பட்சத்தில் காட்டுப்புத்தூர் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விரைவில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கொல்லிமலை சேலூர்நாடு வெண்டலபாடிபட்டி பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுவினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. பள்ளிக்கு அருகில் சந்துகடை மூலமாக சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெண்கள் வேலை செய்ய முடியவில்லை. மதுபோதையில் வரும் நபர்கள் தகாத வார்த்தைகளை பேசுகிறார்கள். எனவே சந்துகடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


Next Story