துணை தலைவருக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு


துணை தலைவருக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு
x

ராமநாதபுரம் மாவட்டம் மல்லல் ஊராட்சி மன்ற தலைவரின் வெற்றி செல்லாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து துணை தலைவருக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் மல்லல் ஊராட்சி மன்ற தலைவரின் வெற்றி செல்லாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து துணை தலைவருக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.

மல்லல் ஊராட்சி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்டது மல்லல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் உதயகுமார் என்பவர் வெற்றி பெற்று தலைவராக இருந்து வந்தார். இவர் தேர்தலில் 851 வாக்குகள் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட பழனிஜோதி என்பவர் 849 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தேர்தல் முடிவை எதிர்த்து ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்காக பழனிஜோதி தேர்தல் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தார். இந்த ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் விசாரணையின் அடிப்படையில் வழக்கினை விசாரித்த ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி மேற்கண்ட ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு பின்னரும் உதயகுமார் ஊராட்சி மன்ற பணிகளை தொடர்ந்து வருவதாக ராமநாதபுரம் கலெக்டரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் மல்லல் ஊராட்சி பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

உத்தரவு

இந்நிலையில் கோர்ட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையாளர் கணேஷ்பாபு அறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ஊராட்சி மன்ற தலைவரான உதயகுமார் வெற்றி பெற்றது செல்லாது என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் அவர் இனி ஊராட்சியின் செயல்பாடுகளில் கலந்து கொள்ளக்கூடாது. ஊராட்சி கணக்குகளை செயல்படுத்துதல், கூட்டங்கள் நடத்துதல் போன்ற தலைவரின் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது. மேலும், ஊராட்சியின் கூட்டங்கள் உள்ளிட்ட ஊராட்சியின் செயல்பாடுகள் துணை தலைவர் மூலம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story