17 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் வீட்டுமனைப்பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவைப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் 319 மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் 17 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவு விற்பனை கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், துணை கலெக்டர் (பயிற்சி) தாட்சாயினி, போச்சம்பள்ளி தனி தாசில்தார் கங்கை, உதவி திட்ட அலுவலர்கள் பிரபாகர், யோகலட்சுமி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.