விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத்தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத்தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
x

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத்தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

விபத்தில் சாவு

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தொழில் செய்வதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன்பெற்று கனரக சரக்கு வாகனம் வாங்கினார். அப்போது, லோகநாதன் பெயரில் ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 337-க்கு தனிநபர் விபத்துக் காப்பீடு செய்யப்பட்டு, அதற்கான பத்திரம் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 5.5.2011-ல் விழுப்புரம் அருகே ஆட்டோவில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் லோகநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து முண்டியம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் லோகநாதனின் விபத்துக் காப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி அவரது மனைவி சம்பூர்ணம்(வயது 57), மகள்கள் செல்லம்மாள்(37), சரோஜா(31), மகன்கள் ராஜா(34), சதீஷ்(28) ஆகியோர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை அணுகியபோது, கிளை மேலாளர் காப்பீட்டுத்தொகை வழங்க மறுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான லோகநாதன் குடும்பத்தினர் தங்களுக்கு வழங்க வேண்டிய விபத்து காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக்கோரி கடந்த 2.4.2012-ல் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

காப்பீட்டுத்தொகை வழங்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர் மற்றும் நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரர்களான சம்பூர்ணம், அவரது மகன்கள் மற்றும் மகன்களான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஷ் ஆகியோருக்கு ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 337 மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 8 ஆயிரத்து 337-ஐ சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சென்னை மேலாளர், பெரம்பலூர் கிளை மேலாளர், சென்னை பொது மேலாளர் ஆகியோர் 45 நாட்களுக்குள் வழங்கவும், தவறும்பட்சத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியில் இருந்து 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story