மசினகுடி அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட 12 விடுதிகளை இடிக்க உத்தரவு-யானைகள் வழித்தட விசாரணை குழு நடவடிக்கை
மசினகுடி அருகே எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்ட 12 சொகுசு விடுதி கட்டிடங்களை இடிக்க யானைகளின் வழித்தட விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.
கூடலூர்
மசினகுடி அருகே எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்ட 12 சொகுசு விடுதி கட்டிடங்களை இடிக்க யானைகளின் வழித்தட விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.
யானைகள் வழித்தடங்களில்
ஊட்டி தாலுகா மசினகுடி அருகே மாயார், சீகூர், சோலூர், முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் வழித்தடங்களில் சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி கோட்டத்தில் உள்ள சீகூர் சமவெளியில் யானைகள் வழித்தடம் தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு கிராம வரைப்படத்துடன் கூடிய அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொகுசு விடுதிகள் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 309 அறைகள் கொண்ட 39 கட்டிடங்கள் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்தது.
விசாரணை குழு
இதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் விதிமுறைகளை மீறிய அனைத்து கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதில் 12 கட்டிட உரிமையாளர்கள் மட்டும் ஆட்சேபனைகள் தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இதனால் பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் தரப்பில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்க வசதியாக கடந்த 14-10-2020 அன்று காட்டு யானைகள் வழித்தடம் தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே.வெங்கடராமன் தலைமையில் பிரவீன் பார்கவா, நந்தித்தா ஹாசரிக்கா என 3 நபர் கொண்ட விசாரணைக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
12 கட்டிடங்களை இடிக்க உத்தரவு
இதனால் யானைகள் வழித்தடம் குறித்து ஆட்சேபனைகள் உள்ளவர்கள் தங்கள் பாதிப்புகளையும், அதன் விபரங்களையும் குறிப்பிட்டு தங்களது கோரிக்கைகளுக்கு ஆதாரமாக உள்ள ஆவணங்களின் நகல்களை இணைத்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் விசாரணை குழுவிடம் வழங்கினர். இதைத்தொடர்ந்து 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது.
இதில் ஆட்சேபனைகள் தெரிவித்த 12 கட்டிட உரிமையாளர்களின் கட்டிடங்களை ஆய்வு செய்த போது எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனால் 12 கட்டிடங்களையும் இடித்து அகற்ற சீகூர் யானைகள் வழித்தட விசாரணை கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஆட்சேபனைகள் தெரிவித்துள்ள மீதமுள்ள மனுக்கள் மீதும் விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிகிறது.