குழந்தை பாலினத்தை கேட்கும் தம்பதியர் குறித்து புகார் அளிக்க உத்தரவு


குழந்தை பாலினத்தை கேட்கும் தம்பதியர் குறித்து புகார் அளிக்க உத்தரவு
x

கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என கேட்கும் தம்பதியர் குறித்து ஸ்கேன் மையங்கள், டாக்டர்கள் சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர், ஜூலை.23-

கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என கேட்கும் தம்பதியர் குறித்து ஸ்கேன் மையங்கள், டாக்டர்கள் சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைந்து வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவமனை டாக்டர்கள், தனியார் ஸ்கேன் மைய உரிமையாளர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் 29 தனியார் ஸ்கேன் மைய உரிமையாளர்களும், 40 தனியார் டாக்டர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து பாலினத்தை தெரிவித்து சட்டத்திற்கு புறம்பாக கருச்சிதைவு மேற்கொண்டு வந்த போலி மருத்துவர் மீதும், கடந்த ஒரு வருடத்தில் 36 போலி மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் சராசரி பாலின விகிதம் 946 ஆகும். குறிப்பாக கந்திலி, திருப்பத்தூர், ஆலங்காயம், ஜோலார்பேட்டை வட்டாரங்களிலும் வாணியம்பாடி நகர்ப்புற பகுதியிலும் பெண்களின் விகிதம் மாவட்ட சராசரியை விட குறைவாக உள்ளது.

வெளி மாநிலங்களில் கரு சிதைப்பு

மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் அருகில் உள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று பாலினத்தை அறிந்து கருச்சிதைப்பு மேற்கொள்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் பாலின விகிதமானது குறைவாகிறது. எனவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து தனியார் ஸ்கேன் மையங்களிலும் குழத்தைகளின் பாலினத்தை எக்காரணத்தை முன்னிட்டும் தெரிவிக்க கூடாது. அவ்வாறு பாலினத்தை தெரிந்து கொள்ளஅணுகும் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கோ, சுகாதார துறைக்கோ கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் தனியார் ஸ்கேன் மையங்களின் மீதும், மருத்துவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாலினத்தை தெரிந்து கொள்ள அணுகும் தம்பதியர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும்.

கண்காணிக்க நடவடிக்கை

வேறு மாவட்டங்களுக்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ செல்லும் கர்ப்பிணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுவர். நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பொது மக்களிடையே விழிப்புனர்வு ஏற்படுத்துவதோடு பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிராம சபை கூட்டங்களில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் (குடும்ப நலம்), திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story