70 பேருக்கு வீடு கட்டும் திட்டத்திற்கான பணி ஆணைகள்
கிருஷ்ணகிரியில் 70 பேருக்கு வீடு கட்டும் திட்டத்திற்கான பணி ஆணைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் 70 பேருக்கு வீடு கட்டும் திட்டத்திற்கான பணி ஆணைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
பணி ஆணைகள்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்த ஆணையிட்டுள்ளார். மேலும் குடிசைகளை மாற்றுவது மட்டுமல்லாமல் குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
வங்கி கணக்கில் நிதி
அதன்படி, இன்று முதல்-அமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 105 பகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 70 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் தனி வீடுகள் கட்ட பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வீடுகள் கட்டிக்கொள்ள அரசு மானியமாக கட்டிட நிலைகளை பொருத்து நான்கு தவணைகளாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகரமன்ற துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் பாலாஜி, செந்தில்குமார், ஜெயகுமார், சந்தோஷ், உதவி பொறியாளர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) மோகன் சக்திவேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.