மூளைச்சாவு அடைந்த பிளஸ்-2 மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
சிவகாசியில் சாலை விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சிவகாசி,
சிவகாசியில் சாலை விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு ஏற்பட்ட மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
மாணவன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 41). இவர் வெளிநாட்டில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மகன் முத்து ஈஸ்வரன் (18). இவர் ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போடவும், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்கவும் தனது தாயின் இருச்சக்கர வாகனத்தில் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டுக்கு வந்தார்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது அவர் மீது மோதாமல் இருக்க மாணவன் முத்துஈசுவரன் தனது இருச்சக்கர வாகனத்தை திருப்பிய போது எதிர்பாராமல் கீழே விழுந்தார். இதில் தலையின் பின் பகுதியில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
மூளைச்சாவு
இந்த நிலையில் மாணவன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்தனர். அவரது இதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகள் எடுக்கப்பட்டு, வேறு நோயாளிகளுக்கு பொருத்த ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உறுப்பு தானத்துக்கு பின்னர் மாணவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.