உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம்


உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம்
x

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அத்துடன் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.

வேலூர்

விழிப்புணர்வு ஊர்வலம்

அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் ஆரணி சாலை, மூஞ்சூர்பட்டு சாலை, வேலூர் சாலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மருத்துவமனையில் முடிவடைந்தது. மருத்துவ மாணவர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மூளைச்சாவு

ஒடுக்கத்தூரை அடுத்த சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ், டெய்லர். இவரது மகன் துர்கபிரசாத் (வயது 12). அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பாக்கம் சாலையில் சைக்கிளில் சென்றபோது, மோட்டார்சைக்கிள் மோதி படுகாயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சிகிச்சை பெற்று வந்த நிலையில் துர்கபிரசாத் மூளைச்சாவு அடைந்தான்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த கலைச்செல்வி (42) என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.

கவுரவிப்பு

மூளைச்சாவு அடைந்த துர்கபிரசாத் மற்றும் கலைச்செல்வி ஆகியோரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, 4 சிறுநீரகம், 2 கல்லீரல், 2 இதயம், 2 இதய வால்வுகள் மற்றும் கண்கள் ஆகியவற்றை தானமாக வழங்கினர்.

இந்தநிலையில், உடல் உறுப்புகள் தானம் வழங்கிய துர்கபிரசாத்தின் தந்தை சதீஷ் மற்றும் கலைச்செல்வியின் மகள் மோனிகா ஆகியோரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நேற்று வரவழைத்து டீன் பாப்பாத்தி சான்றுகள் வழங்கி கவுரவித்தார். மேலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதன் நினைவாக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Next Story