மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்


் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

மூளைச்சாவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 46). முருகன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கூலிவேலை செய்து வந்த கலைச்செல்வி கடந்த 1-ந் தேதி மாலை சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் கலைச்செல்வி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சைபெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

உடல் உறுப்புகள் தானம்

அதன்பேரில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. கலைச்செல்வியின் இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் 2 கண்கள் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதல்முறையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story